மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு சுரேஷ் சலேவின் கைது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாகும். அந்த அரசியல் சதியால் பயனடைந்தவர்கள் தற்போது கவலை வெளியிடுவது இயல்பானதே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார். அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமையானது, தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியால் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு இது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாகும். ஆகவே அந்த அரசியல் சதியால் பயனடைந்தவர்கள் கவலை வெளியிடுவது இயல்பானதே என பதிவேற்றம் செய்துள்ளார். 2019.04.21 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, அலி சப்ரி ஆகியோர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அதேபோல் பாராளுமன்ற உறுப்பினரான திலித் ஜயவீரவும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.