வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையைத் திட்டமிட்ட வகையில் வளர்ச்சியடையச் செய்வதற்குத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அவசியம் எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், முதலீட்டாளர்களை வரவேற்று, எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் அதிகாரிகள் நேர்மையான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சுற்றுலா முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (13) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபை, மாவட்டச் செயலகம், மாகாணத் திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டுத் தரப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

 

கலந்துரையாடலின் தொடக்கத்தில் உரையாற்றிய ஆளுநர், வியாழக்கிழமை (12) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு நிதி மூலங்கள் மற்றும் திட்டங்கள் ஊடாகக் கணிசமான நிதி ஒதுக்கீடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. குறிப்பாக, சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கும் கணிசமான நிதி கிடைத்துள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏதுவாகப் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை வளர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்றார்.

இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட ஆளுநர், முதலீட்டாளர்களை மாகாணத்துக்கு அழைப்பது மாத்திரமன்றி, அவர்கள் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதும் அரச நிறுவனங்களின் பொறுப்பாகும் என வலியுறுத்தினார். சில அதிகாரிகளின் அணுகுமுறைகள் முதலீட்டாளர்களை மனமுடையச் செய்வதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

அரசாங்கத்தின் கொள்கை அணுகுமுறையில் முதலீடுகளுக்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ள போதிலும், நிர்வாக மட்டத்தில் அதற்கேற்ற மாற்றம் முழுமையாக ஏற்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், முதலீட்டாளர்கள் வருவதன் ஊடாகவே உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றார். எனவே, முதலீட்டாளர்கள் முன்வைக்கும் திட்டங்களில் சட்டரீதியான குறைபாடுகள் காணப்பட்டால், அவற்றை எவ்வாறு திருத்தி உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொடுக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் அணுக வேண்டும். முதலீடுகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனப்பாங்கு இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

மேலும், சில அரசியல் தரப்பினரும் அதிகாரிகளும் மக்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி முதலீட்டுத் திட்டங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை உருவாக்க முயற்சிப்பதாகத் தனது கவலையை வெளிப்படுத்திய ஆளுநர், இத்தகைய சூழ்நிலைகளில் அதிகாரிகள் பொதுவிமர்சனங்களைக் கண்டு அச்சமடையக் கூடாது என்றார். சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நடுநிலையுடனும் பொறுப்புடனும் சரியான முடிவுகளை எடுத்து, மாகாண மக்களின் நலனையும் முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்திச் செயற்பட வேண்டும். விமர்சனங்களுக்கு அஞ்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மாகாணத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் வலியுறுத்தினார்.

எல்லாளன் சுற்றுலா முதலீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராய்வு

கலந்துரையாடலின் முதலாவது அமர்வில், எல்லாளன் சுற்றுலா நிறுவனத்தால் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றுலாச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள முதலீட்டு முயற்சிகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. தற்போதைய சுற்றுலாச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஒவ்வொன்றாக முன்வைக்கப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கினர்.

குறிப்பாக, பண்ணைக் கடற்கரையில் முன்னெடுக்கப்படும் கடல் சுற்றுலாச் செயற்பாடுகளுக்கு அவசியமான இறங்குதுறை வசதியை ஏற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாண மாநகர சபையின் ஊடாக அதற்குப் பொருத்தமான தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் இணக்கம் காணப்பட்டது. அத்துடன், கடல் சுற்றுலாச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய ஒத்துழைப்பை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முதலீட்டுத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான ஒழுங்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணக் கடல் படகுச் சுற்றுலாத் திட்டம் குறித்தும் கலந்துரையாடல்

அடுத்ததாக, யாழ்ப்பாணத்தில் கடல் படகுச் சுற்றுலாவை முன்னெடுப்பதற்கான முதலீட்டுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது. கடந்த காலத்தில் இதேபோன்ற படகுச் சுற்றுலாச் சேவையொன்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் தாமதமடைந்ததன் காரணமாக, குறித்த படகுச் சேவை கிழக்கு மாகாணத்துக்கு மாற்றப்பட்டமை தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இத்தகைய முதலீட்டு வாய்ப்புகள் நிர்வாகத் தாமதங்களால் வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடாமல், அவற்றை வடக்கு மாகாணத்திலேயே நடைமுறைப்படுத்துவதற்கான சாதகமான சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி, பண்ணை அல்லது குருநகரிலிருந்து படகுச் சுற்றுலாச் சேவையை ஆரம்பித்து, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு வரையில் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் முன்வைக்கப்பட்டன. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவைகள், சாத்தியப்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

பண்ணை சுற்றுவட்டம் மற்றும் கடலோர அபிவிருத்தி

இறுதியாக, பண்ணை சுற்றுவட்டம் மற்றும் அதனைச் சூழவுள்ள கடலோரப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இத்திட்டத்தை முன்னெடுப்பதற்குத் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் இடர்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திட்டத்தின் நோக்கத்தைப் பாதிக்காமல் நடைமுறைப்படுத்தக்கூடிய மாற்று வழிமுறைகள் தொடர்பிலும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன.

யாழ்ப்பாணத்தின் சுற்றுலா வளங்களைப் பயன்படுத்தி புதிய முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதற்கான இம்முயற்சிகளைத் துரிதப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் தமக்குரிய பொறுப்புகளை ஒருங்கிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதும் கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ மேயர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத் தலைவர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி அமைச்சின் திட்டப் பணிப்பாளர், சுற்றுலாத்துறைத் திணைக்களப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபை வடபிராந்தியப் பணிப்பாளர், மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், தனியார் முதலீட்டுத் திட்டங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.