வீட்டு பயன்பாட்டுக்கான சூரிய மின்சக்தி திட்டத்துக்கு மத்திய அரசோடு இணைந்து மாநில அரசும் மானியம் வழங்கும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக 20,000 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வீட்டு பயன்பாட்டுக்கான சூரிய மின்சக்தி (சோலார்) உற்பத்தி திட்டத்துக்கான மானியம் குறித்து முதல்வர் விஜய் இரண்டு வாரங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆன்லைன் முறையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான போர்ட்டல் இரு வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு வாரங்களில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் மானியம் மற்றும் மாநில அரசின் மானியம் இரண்டும் பயனாளிகளுக்குக் கிடைக்கும்.
தமிழகம் முழுவதும் சோலார் பேனல்களை விற்பனை செய்யும் சுமார் 1,500 விற்பனையாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சோலார் பேனல்களை பொருத்தும் பணிகளை ஆன்லைன் முறையில் எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
மானியம் பெறத் தகுதியான 1,500 பேருக்கு மானியத்தை விடுவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெற வேண்டிய பணிகளை விரைவாக முடிப்பதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் எண்ணிக்கையில்தான் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசின் மானிய அறிவிப்பை அடுத்து இரண்டு வாரங்களில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பது, இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையே காட்டுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான கொள்கை 10 நாட்களுக்குள் வெளியிடப்படும். அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து பிறகு பயன்படுத்துவதில் சிறந்த கொள்கையை நாம் பின்பற்ற இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் நாம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருகிறது. இன்னும் ஒருசில வாரங்களில் அனைத்து நடவடிக்கைகளும் முடிவுபெற்று, டிஜிட்டல் முறையில் போர்ட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அப்போதுதான் சோலார் பேனல் விற்பனையாளர்கள் தாமதமின்றி பணிகளைச் செய்வது, மீட்டர் பொருத்தும் பணிகளை மின்வாரியத்துறையினர் தாமதமின்றி செய்வது என அனைத்தையும் இதில் கண்காணிக்க முடியும். தாமதம் ஆகிறது என்றால், எங்கே ஆகிறது என்பதையும் இதன்மூலம் அறிந்து கொள்ள முடியும். கடந்த காலங்களில் மீட்டர் பொருத்துவதில்தான் அதிக தாமதம் ஏற்பட்டது. இனி அவ்வாறு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பீக் ஹவர்களில் 3,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. நெய்வேலி உட்பட ஒன்றியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய மின்சாரமும் 3,000 மெகாவாட் அளவுக்கு வரவில்லை. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வெளியிட்டிருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.