யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று சிறுவன் ஒருவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 260 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாள் பணிகள் நேற்று(08) இடம்பெற்றன.
இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் இருந்து இரண்டு முழுமையான மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை மொத்தம் 260 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து 256 மனித என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடங்கிய கடந்த 11 நாள்களில் மட்டும் 17 மனித என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று(09) சனிக்கிழமை என்பதால் அரை நாள் மட்டுமே அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும், மழையுடனான காலநிலை தொடருமானால் இன்றைய அகழ்வுப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகின்றது.
தசாப்தங்களாகப் புதைந்து கிடக்கும் செம்மணி மர்மங்கள், ஒவ்வொரு அகழ்வின் போதும் அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணியில் புதிதாக சிறுவன் ஒருவனின் என்புக்கூடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space