அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் பின்னணியில், கட்டார்மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடன் ஈரான் மீண்டும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்த அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பதில் இன்றைய தினத்திற்குள் (செவ்வாய்க்கிழமை) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து இயல்புநிலை கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்க ஈரான் 07 நாட்கள் கொண்ட நிபந்தனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தளர்த்துதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் பிராந்தியத்தில் (லெபனான் உட்பட) இராணுவ மோதல்களையும் அழுத்தங்களையும் நிறுத்துதல் ஆகிய முதன்மை நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே பொருளாதாரத் தடைகள் நீக்கத்தைக் கேட்பதால் இத்திட்டத்தை நிராகரிப்பதாகக் கூறியிருந்தார்.
எனினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மத்தியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.
"நாங்கள் போரை மீண்டும் சந்திக்க முழுமையாகத் தயாராக இருக்கிறோம். எந்தவொரு புதிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள உறுதியாக நிற்கிறோம். அதே நேரத்தில், இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது அதிபர் டிரம்பின் கைகளில்தான் உள்ளது." என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.