சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை கொள்வனவு செய்து, அவற்றை பொருத்தி தயாரிக்கப்பட்ட  சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட 03 குற்றச்சாட்டுகளையும், நீதிமன்றத்தின் முன் ஒப்புக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு, 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு, குறித்த வாகனத்தையும் அரசுடமையாக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு இன்று  (25) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 மோட்டார் வாகனச் சட்டத்துக்கமைய, சட்டவிரோதமான முறையில் வாகன பாகங்களை இறக்குமதி செய்து, அவற்றை பொருத்தி தயாரிக்கப்பட்ட சொகுசு கார் ஒன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட 03 குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கமைய வழக்கு அழைக்கப்பட்ட போது மன்றில் முன்னிலையான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 03 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

 அதற்கமைய முதலாவது குற்றச்சாட்டிற்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான், குறித்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஒரு மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இரண்டாவது குற்றச்சாட்டிற்கு ஒரு மாத கால கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறும் உத்தரவிட்டதோடு, 1 இலட்சம் ரூபா அபராதமும், அதனைச் செலுத்தத் தவறின் 06 மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும், மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிவான், அதனைச் செலுத்தத் தவறின் மூன்று மாத கால சிறைத்தண்டனை அனுபவிக்குமாறும் தீர்ப்பளித்திருந்தார். மேலும் பாகங்களை பொருத்தி தயாரிக்கப்பட்ட குறித்த வாகனத்தையும் அரசுடமையாக்குமாறும் கோட்டை நீதிவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்திருந்தார்.