வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கான துறவற ஆடையை மீள அணிவிக்கும் சடங்கிற்கான திகதியையும் நேரத்தையும் ஒழுங்குபடுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் சியாம் மகாநிக்காயவின் கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரான கலாநிதி இத்தபான தம்மலங்கார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில், பௌத்த போதனைகள் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு இணங்க துறவற ஆடையை மீள அணிவிக்கும் சடங்கு நடத்தப்பட வேண்டும்.
இந்தச் சடங்கை முன்னெடுக்கக் கூடிய வகையில், விரைவில் பொருத்தமான திகதியையும் நேரத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மகாநாயக்கர் உட்பட கோட்டை பீடத்தின் சங்க சபையின் 10 உறுப்பினர்களைக் கொண்ட தூதுக்குழுவினர் இந்த நிகழ்வுக்காகச் சிறைச்சாலைக்கு வருகை தருவார்கள்.
அவர்களின் பிரவேசத்துக்கான அவசியமான ஏற்பாடுகளைச் செய்வதுடன், திட்டமிடப்பட்ட திகதி மற்றும் நேரத்தை அறிவிக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது.
இக்கடிதத்தின் பிரதி ஒன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.