மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 'டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை' விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் உள்ளிட்ட துறையின் முக்கிய பங்குதாரர்கள் இணைந்து எடுத்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறைக்கு அமைவாக, காப்புறுதி நிறுவனங்கள் டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை விநியோகிப்பதுடன், காப்புறுதிதாரரின் விசேட கோரிக்கையின் பேரில் மாத்திரம் அச்சிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கவுள்ளன. அத்துடன், காப்புறுதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக கைபேசி செயலி ஊடாகவும் இந்த டிஜிட்டல் காப்புறுதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த டிஜிட்டல் முறைமைக்கு இணையாக 'தேசிய காப்புறுதி சரிபார்ப்பு அமைப்பு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வாகனக் காப்புறுதியின் செல்லுபடியாகும் தன்மையை பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இலகுவாக உறுதிப்படுத்த முடியும்.
வாகனக் காப்புறுதியின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்காக 1338 என்ற விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது கைபேசி ஊடாக *1338# என்ற யுஎஸ்எஸ்டி குறியீட்டைப் பயன்படுத்தியோ அல்லது 1338 என்ற இலக்கத்திற்கு வாகன இலக்கத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்புவதன் மூலமோ காப்புறுதிச் சான்றிதழ் தற்போது செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா ? என்பதை உடனடியாக அறிந்துகொள்ள முடியும். மே முதலாம் திகதி முதல் டிஜிட்டல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டாலும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சாதாரண காப்புறுதி அட்டைகள் அவற்றின் காலாவதித் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்காலிக காப்புறுதி ஆவணங்கள் வழங்கும் முறை மறு அறிவித்தல் வரை தொடரும். ஒரு சாரதி டிஜிட்டல் அட்டையை நேரடியாகச் சமர்ப்பிக்கத் தவறினாலும், அதன் அச்சிடப்பட்ட நிழற்படப் பிரதியைச் சமர்ப்பிக்கும் போது அதிகாரிகள் 1338 என்ற இலக்கத்தின் ஊடாக அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டத்தின் படி, இந்த டிஜிட்டல் ஆவணங்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவை என்பதுடன் அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை நிராகரிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்; மே 1 முதல் அமுலுக்கு வருவதாக அறிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space