அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ஆசியப் பயணத்தின் முதற்கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவை சென்றடையவுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான 'ஆசியான்' உச்சிமாநாட்டின் இறுதி நாளில் நடைபெறும் இந்த விஜயத்தின் போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் முதலாவது 'குவாட்' தலைவர்கள் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய 4 நாடுகளை உள்ளடக்கிய குவாட் கூட்டமைப்பின் தலைவர்கள் டொனால்ட் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மணிலாவில் சந்திக்கின்றனர். 

2024 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெறும் இந்தச்  சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு, அரிய வகை கனிமங்களின் விநியோகச் சங்கிலி, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு  ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.

கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டைத் தவிர்க்கும் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப், 'அமெரிக்கா - ஆசியான் விசேட உச்சிமாநாட்டில்' கலந்துகொள்வதுடன், இன்று தாய்லாந்துப் பிரதமர் அநுதின் சார்ன்விராகுலுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், நாளை புதன்கிழமை (18) பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வருகைக்கு எதிராக மணிலாவில் கடந்த சில நாட்களாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்காசியப் போரை நிறுத்தக் கோரியும், அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ட்ரம்பின் உருவபொம்மைகளை எரித்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் பயணத்தைத் தொடர்ந்து, சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள APEC உச்சிமாநாட்டிற்குச் செல்லும் ட்ரம்ப், அங்கு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.