தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ரூ. 20 கோடி வரை பணமோசடிசெய்த விவகாரத்தில், பெண் காவல் ஆய்வாளருக்கு முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய ஷீலா மேரி, தனது உறவினரான பிரபு மணி என்பவர் மூலமாக, ஒரு நிறுவனத்தை தொடங்கி அதில் தங்கத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி, பலரை அதில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.
காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். கடந்த 2023-24 காலகட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்திருந்த நிலையில், பிரபுமணி அந்த நிறுவனத்தை மூடிவிட்டு திடீரென தலைமறைவாகி விட்டார்.
அதையடுத்து, ரூ.20 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக பிரபுமணி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி ஆகியோருக்கு எதிராக, முதலீடு செய்தவர்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், பிரபுமணியை கைது செய்தனர். ஷீலா மேரியை தேடி வருகின்றனர். இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஷீலாமேரி, தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.குமரப்பன் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில், ‘தங்க முதலீடு திட்டம் எனக்கூறி பலரிடமும் ரூ. 20 கோடி வரை மோசடி செய்துள்ள சம்பவத்தில், பெண் காவல் ஆய்வாளரான மனுதாரருக்கும் தொடர்புள்ளது.
எனவே, அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக் கூடாது’ என, ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தங்க முதலீடு திட்ட பணமோசடி: பெண் காவல் ஆய்வாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space