“பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் 3 கி.மீ தொலைவுக்கு 6 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளையும், 2 கி.மீ நீளத்துக்கு நடைபாதை அமைக்கும் பணிகளையும் நிறுத்தி, கட்டுமானங்களை தகர்த்தெறிய வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி ஒரு கி.மீ சுற்றளவில் கட்டுமானங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த வரவேற்கத்தக்கத் தீர்ப்பு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து போராடி வந்த பாமகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.

ராம்சார் ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அதில் கட்டுமானங்களை மேற்கொள்ள கடந்த ஆட்சிகளில் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் சதுப்பு நில எல்லைக்குள்ளாகவே தனியார் கட்டுமான நிறுவனம் சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டதை அடுத்து, அது குறித்து தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டி, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதித்து கடந்த ஆண்டு செப்.24-ம் தேதி ஆணையிட்டது.

அந்தத் தடையை அகற்ற வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தான் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றிலும் கட்டுமானங்களை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசே தயாராக இருந்தது. அதற்கு வசதியாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப் பகுதியை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்ட 8,397 ஏக்கர் பரப்பளவிலிருந்து, 316 ஏக்கராக குறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த முடிவை தாங்களும் ஏற்றுக் கொள்வதாக தனியார் கட்டுமான நிறுவனங்களும் மகிழ்ச்சியுடன் உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தன. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பாதுகாப்புக்கு எதிரான இந்த மோசமான சமரசத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்களை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும். இந்த விஷயத்தில் பாமக எதை வலியுறுத்தி வந்ததோ, அதுவே நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பும் நிலத்தை பாதுகாப்பதற்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழக முதல்வர் விஜய்ய்க்கு 2 முறை கடிதம் எழுதியுள்ளேன்; 3 முறை அறிக்கை வெளியிட்டுள்ளேன். பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதெல்லாம் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அதை ஆக்கிரமிக்க வசதியாக கட்டப்படும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதையை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

அதேபோல், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக சட்டப் பேரவைக் கட்சித் தலைவருமான சவுமியா அன்புமணியும் பள்ளிக்கரணையை நேரில் பார்வையிட்டு, இதே கருத்தை வலியுறுத்தினார். இது தொடர்பாக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதிய சவுமியா அன்புமணி, தமிழ்நாடு மாநில ஈர நிலங்கள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ராகேஷ்குமார் ஜகானியாவை நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தினார். இதுதொடர்பாக சென்னை தியாகராயர் நகர் பாண்டிபஜார் பகுதியில் கையெழுத்து இயக்கமும் நடத்தி தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.