தபால் சேவையை நவீனமயப்படுத்தி, ஊழியர்கள் ஆர்வத்துடன் பணியாற்றக்கூடியதும், பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடியதுமான நிறுவனமாக மாற்றுவதுடன், இலங்கை தபால் சேவையை உலகின் சிறந்த தபால் சேவைகளில் ஒன்றாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன வலியுறுத்தினார்.
கொழும்பு ராஜகிரிய பகுதியில் சனிக்கிழமை(03) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தபால் சேவை தொடர்பில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக காணப்பட்ட ஊழியர் மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக ஆட்சேர்ப்பு செய்யப்படாத ஊழியர்களும் தற்போது இணைத்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
தபால் அலுவலகங்களின் பழைய தோற்றத்தை மாற்றி, 'இலங்கை தபால்' என்ற புதிய அடையாளத்துடன் சேவையை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். நாடு முழுவதும் தபால் அலுவலகங்களை மீளமைத்தல் மற்றும் புதிய அலுவலகங்களை நிர்மாணிப்பதற்காக சுமார் 1,200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கடந்த கால எரிபொருள் நெருக்கடியை தொடர்ந்து தனியார் நிறுவனங்கள் விநியோகக் கட்டணங்களை அதிகரித்த போதிலும், தபால் திணைக்களம் பழைய கட்டணத்திலேயே சேவையை தொடர்ந்து வழங்கியது. இதனால் அதிகளவான சேவைப் பயனாளர்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
தற்போது மத்திய தபால் பரிமாற்றகத்தில் அதிகளவான பொதிகள் குவிந்துள்ளன. எனவே, விரைவான விநியோகத்துக்காக தனியான இடமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் அல்லது காணியொன்றை பயன்படுத்தி தனியான சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தபால் போக்குவரத்தை முறையாக முன்னெடுப்பதற்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த வருடமும் மேலும் வாகனங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த வருடம் தபால் விநியோகத்துக்காக 165 மின்சார மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்திலும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தபால் விநியோக ஊழியர்களுக்கான 200 ரூபா துவிச்சக்கர வண்டி கொடுப்பனவு இந்த வருடம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர் பற்றாக்குறையையும் படிப்படியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகின் சில நாடுகளில் தபால் சேவைகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், இலங்கை தபால் சேவையை மேலும் வலுப்படுத்தி, ஊழியர்கள் ஆர்வத்துடன் பணியாற்றக்கூடியதும் மக்கள் தொடர்ந்து பயன்படுத்தக்கூடியதுமான நிறுவனமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.
விரைவான விநியோகம் மற்றும் கூரியர் சேவைகளை விரிவுபடுத்தி, அரச நிறுவனங்கள் தபால் சேவையை அதிகளவில் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் சேவைப் பயனாளர்களை அதிகரிக்க முடியும்.
ராஜகிரிய தபால் அலுவலகத்தில் முறைப்பாடுகள் குறைவாக உள்ளன. நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு ஊழியர்கள் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். தபால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் இல்லாமல் எந்தக் கொள்கையையும் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
நிறுவனம் முன்னேறினால் ஊழியர்களின் முன்னேற்றத்துக்கும் வாய்ப்புகள் ஏற்படும். நட்டத்தில் இயங்கும் அலுவலகங்களை தொடர்ந்து நடத்துவதில் பயனில்லை. எதிர்வரும் வருடங்களில் அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கக்கூடிய நிறுவனமாக இலங்கை தபால் சேவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.