தமிழகம் முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்
Ad Space
Ad Space
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநிலம் தழுவிய 2-ம் கட்ட தேர்தல் பயிற்சி நேற்று நடத்தப்பட்டது.
இதில் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பணிகள், பொறுப்புகள் தொடர்பான தலைப்புகளிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்த நேரடிப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களின் வாக்குகளை தபால் வாக்குச்சீட்டு மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டது.
சுமார் 3 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் ‘படிவம் 12’ வாயிலாக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.
இப்பயிற்சி மையங்களிலேயே அவர்கள் தங்களது தபால் வாக்குச்சீட்டுகளைப்பெற்று, அங்கேயே வாக்குகளைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று சுமார் 3 லட்சம் பேர் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்.
முந்தைய நடைமுறைப்படி, தேர்தல் பணியாளர்கள் தபால் வாக்குச்சீட்டை தங்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று, பின்னர் தபால் மூலம் அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்தது.
தற்போது அதற்கென அமைக்கப்பட்ட வாக்களிப்பு மையங்களிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
புரோ மாடியூல் பரிசோதனை
தேர்தல் நாளன்று, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீத விவரங்களை புதுப்பிக்க, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு உதவும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் தனது ‘இசிஐநெட்’ செயலித் தொகுப்பில் புரோ மாடியூல் (PRO Module) என்ற தொகுதி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இது நேற்று பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சம் வாக்காளர்கள், 4.63 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 1.20 லட்சம் முதியோர், 70 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1.90 லட்சம் பேர் ‘12-டி’ படிவம் பெற்று, தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இவர்களும் கடந்த சில நாட்களாக தங்கள் வீட்டில் இருந்தவாறே தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தலில் தலா 75,164 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்துக்கு மேற்பட்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஓர் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். இத்தேர்தலில் தமிழகம் முழுவதும் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்களது பெயர்கள், சின்னங்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
Ad Space
Ad Space