உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழீழ விடுதலைக்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டவர் சிவாஜிலிங்கம் ஆவார்.
இளம் வயதில் போராளியாக விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அவர் பிற்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடைவிடாது போராடிய பெருமைக்குரியவர்.
தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்கு உணர்வு ஊட்டுவதற்காக இடைவிடாது தொண்டாற்றியவர்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்பினையும் உயர் மதிப்பினையும் பெற்றவர். பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு இறுதிக் காலத்தில் மகனைப் போலவே பணிவிடை செய்து பாதுகாத்தவர்.
இத்தகைய பெருமைக்குரிய அவரின் மறைவு தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.