செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும்  பிரச்சினை காணப்பட்டால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம். 

ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அனோஜன் விவகாரத்தில் நாடு என்ற ரீதியில் வெற்றிப்பெற்றுள்ளோம்.ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அனோஜன் விவகாரத்தில் வேதனையடைந்த நிலையில் அனைவரின் மனங்களுக்கும் சவூதி அரசாங்கம் ஆறுதலளித்துள்ளது.  சவூதி இராச்சியத்துக்கும், அந்நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கும் அரசாங்கம் சார்பிலும், நாட்டு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அனோஜனை பாதுகாப்பதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன். சவூதிக்கு சென்ற இலங்கையின் சட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

செம்மணி மனிதப்புதைக்குழி விவகாரம் தற்போது பேசப்படுகிறது. இந்த விடயம் உணர்வுப்பூர்வமானது மற்றும் கொடுமையானது.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்துக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படவில்லை. அகழ்வுப் பணிகளுக்கும், சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்து போதுமான நிதி ஒதுக்கப்பட்டது. முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.

மனிதப்புதைக்குழி தொடர்பில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறப்பிடப்படுகின்றன. இந்த அறிக்கை தனிநபர் ஒருவரால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை. நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய பொறிமுறை கட்டமைப்பு  பலவீனமடையும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேச பொறிமுறையை நாட வேண்டும்.ஆகவே இந்த விடயத்தில் தேசிய கட்டமைப்பு வலுவானதாகவே காணப்படுகிறது. ஆகவே தனிப்பட்ட நபரின் பெயர்களை குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது அது எதிர்கால செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமையும்.

செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும்  பிரச்சினை காணப்பட்டால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம்.

ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம் என்றார்.