தரம் குறைந்த மருந்துப்பொருட்களை கொண்டுவந்த கெஹலிய ரம்புக்வெலவை பதவி விலகி செல்லுமாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, தனது அமைச்சரவையில் இருந்துகொண்டு தரம் குறைந்த நிலக்கரி கொண்டுவந்து நாட்டுக்கு கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை பதவி நீக்க பின்வாங்கி வருகிறார். கெஹலிய செய்த தவறையே தற்போது குமார ஜயகொடி செய்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பிபெரேரா தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் நீதிமன்றம் குற்றப்பத்திரம் கையளித்திருக்கிறது. எந்தவொரு அரச ஊழியருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டால், சட்டத்தின் பிரகாரம் அவர் பணி நீக்கப்படுவார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க அவரால் முடியாமல் இருக்கிறது.
அமைச்சர் குமார ஜயகொடி மக்கள் வாக்குளால் தெரிவானவர் அல்ல. அநுரகுமார திசாநாயக்க அவரை தேசியப்பட்டியல் மூலமே தெரிவு செய்தார். அவர் அரசியல் செய்தவர் அல்ல. மாறாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான ஒரு நபராக இருந்துவந்தார். அநுர குமார திசாநாயக்கவின் வலது கையாக இருந்துவந்தார்.
அதனாலே அவரை தேசியப்பட்டியல் மூலம் தெரிவுசெய்து, நாட்டில் இருக்கும் பிரபல அமைச்சான வலுசக்தி அமைச்சை அவருக்கு ஜனாதிபதி வழங்கினார். இதன் காரணமாகவே அவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி பின்வாங்கி வருகிறார்.
அத்துடன் இந்த நிலக்கரி மோசடி குமார ஜயகாெடிக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது அல்ல. அவரால் தனித்து இதனை செய்ய முடியாது. இந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அமைச்சரவைக்கான யோசனைகள் மற்றும் அமைச்சரவை பத்திரம் குமார ஜயகொடியினுடையதாக இருக்கலாம். ஏனெனில் கெஹலிய ரம்புக்வல மருந்து மோசடியை மேற்கொண்டது அமைச்சரவையின் அனுமதியுடனாகும். அமைச்சரவைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியது கெஹலியவாகும். கெஹலிய அமைச்சரவையை பிழையாக வழிநடத்தி இருப்பதாகவே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதே தவறையே தற்போது குமார ஜயகொடி செய்துள்ளார்.
அன்று தரம் குறைந்த மருந்துப்பொருட்களை கொண்டுவந்த கெஹலிய ரம்புக்வெலவை பதவி விலகி செல்லுமாறு தெரிவித்த அநுரகுமார திசாநாயக்க, தான் நியமித்த அமைச்சருக்கு அவ்வாறு சொல்லப்போவதில்லை. இந்த தரம் குறைந்த நிலக்கரி காரணமாக நாளாந்தம் கோடிக்கணக்கு ரூபா நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் ஜனாதிபதி தனது அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை.
அதேநேரம் இந்த நிலக்கரி பிரச்சினை மேலோங்கும்போது, வலுசக்தி அமைச்சுக்கு பலமாக பிரதி அமைச்சராக பொறியியலாளராக அர்கம் இல்யாஸ் நியமிக்கப்பட்டார். இந்த தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவை சுத்தப்படுத்த பலரும் பல்வேறு விடயங்களை தெரிவித்துவந்தார்கள். ஆனால் பிரதி அமைச்சர் தெரிவிக்கும்போது, இந்த நிலக்கரி தொடர்பில் அறிக்கையில் பிரச்சினை இருக்கிறது. அதேபோன்று இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் குறைவு காணப்படுகிறது. என்றாலும் நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அவரது அமைச்சின் செயலாளர் இது தொடர்பான கலந்துரையாடலுக்கு 3மாதங்களாக பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அப்போது இதனை தெரிவிக்கவில்லை. அதேநேரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை கையளித்திருக்கிறது.
அந்த அறிக்கையில் இவ்வாறான எந்த தகவலும் இல்லை. இவர்களுக்கு தற்போது தெரிவிப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி குறைவடைய, மின்உற்பத்தியில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என தெரிவித்து, இந்த சம்பவத்தைதிசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார்.
தரம் குறைந்த நிலக்கரி விவகாரம்: அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space