இலங்கையின் தேரவாத பௌத்த மரபின் மூன்று பிரதான பௌத்த முப்பீடங்களான சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகியவற்றின் தலைமையகங்கள் தத்தமது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுவதாகத் தெரியவில்லை என பெங்கமுவே நாலக தேரர் விசனம் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, வறிய கிராமங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பௌத்த சாசனத்துக்கும் மக்களுக்கும் சேவையாற்றிவரும் தேரர்களின் நலன்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை. அதேவேளை, அநுராதபுரத்தில் இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட அண்மைய நிகழ்வுகள், பௌத்த தேரர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள அணுகுமுறை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. அரசாங்கம் மதச்சார்பற்ற அரசாங்கம் என பௌத்த தேரர்களே கூறும் நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (17)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதிலும், தேரர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதிலும் சியாம், அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய மூன்று பௌத்த முப்பீடங்களின் தலைமையகங்களுக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு முப்பீடத்துக்கும் தனித்தனியான தலைமையகங்கள் காணப்படுகின்ற போதிலும், அவை தமது பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றுகின்றனவா என்பது குறித்து ஆராய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, வறிய கிராமப்புறங்களில் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் பௌத்த சாசனத்துக்கும் மக்களுக்கும் பெரும் சேவையாற்றிவரும் தேரர்கள் பலர் உரிய ஆதரவின்றி சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் தேவைகள், நலன்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முப்பீடங்களின் தலைமையகங்கள் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

அநுராதபுரத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் பௌத்த தேரர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை எடுத்துக்காட்டுகின்றது. அங்கு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது பௌத்த தேரர்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்காக உரிய தரப்புகள் தலையிட வேண்டும்.

அதேவேளை, தற்போதைய அரசாங்கம் பௌத்த தேரர்களுக்கு உரிய மதிப்பளிப்பதில்லை என்ற கருத்து சமூகத்தில் நிலவுகின்றது. அரசாங்கம் மதச்சார்பற்ற அரசாங்கமாகச் செயற்படுவதாக பௌத்த தேரர்களே கூறும் நிலை உருவாகியுள்ளது. காவி உடை அணிந்த பௌத்த தேரர்கள் சமூக ஊடகங்களில் நாளுக்கு நாள் அவமதிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலைமைகள் தொடர்பில் பௌத்த முப்பீடங்களின் தலைமையகங்களும் மகாநாயக்க தேரர்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

எனவே, மகாநாயக்க தேரர்கள் மூன்று பௌத்த முப்பீடங்களின் தலைமையகங்களின் செயற்பாடுகளையும் மீளாய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, வறிய கிராமங்களில் சேவையாற்றும் தேரர்களின் நலன்களையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும். பௌத்த சாசனத்தின் பாதுகாப்பையும் தேரர்களின் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதில் முப்பீடங்களின் தலைமையகங்கள் தமது பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றார்.