தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, திருவல்லிக்கேணி போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக அரசைக் கவிழ்க்கும் நோக்கில் சட்டப்பேரவையில், பேரவைத் தலைவருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக செயல்பட்டால் ரூ.35 கோடி அன்பளிப்பாகத் தருவதாகக் கூறி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், கார்த்திக், ரமேஷ் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் நிபந்தனை முன்ஜாமீன் பெற்று தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற ரமேஷ் என்பவர், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், சிபிஐ தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரமேஷ் மீதான வழக்கை விசாரிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் சமீபத்தில் ஜாமீன் பெற்ற சேதுராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், ‘‘குதிரை பேர வழக்கில் மாநில போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. போலீஸார் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். எனவே. இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்’’ என்று வாதிடப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், ‘‘இந்த விவகாரத்தில் பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர். எனவே, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். அத்துடன் அடுத்த விசாரணையை ஆக.27-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள திருநாவுக்கரசு, ராஜேஷ், தியாகராஜன், கணேசன், சீனிவாசன், செல்வம் ஆகிய 6 பேருக்கு ஜாமீன் கோரியும், தீபக், செல்வரங்க முருகன், அழகேசன், சக்திவேல் ஆகிய 4 பேர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சிறையில் உள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும், தீபக் உள்ளிட்ட 4 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே பலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்: விசாரணைக்கு தடை விதித்தது உயர் நீதிமன்றம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space