சமீபத்தில் ஐ.நா சபையின் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், இன்னும் சில ஆண்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் திவால் ஏற்படப் போவதாக கூறியுள்ளனர். அதற்கு காரணம், மண்ணையும், மணலையும் கொள்ளையடித்தது தான். மணல் மாஃபியா கும்பலுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று கூற முடியுமா? தண்ணீர், மணல், கனிமவளம் வரிசையில் இந்த ஆட்சியில் கடன் மேல் கடன் வாங்கி தமிழ்நாடே திவாலாகப் போகிறது.
பெரிய, பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடன் செய்யாமல், ஆட்சி முடிவடையும் நேரத்தில் தான் அடிக்கல் நாட்டுவார்கள். பிறகு தேர்தலில் தோல்வியடைந்துவிட்டால், எங்கள் ஆட்சி முடிந்துவிட்டது என நாடகம் ஆடுவார்கள். மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆட்சிக்கு வந்த உடனயே திட்டங்களை தொடங்க வேண்டியது தானே? மீனவர் பிரச்சினைக்கு முதல்வர் அடிக்கடி கடிதம் மட்டும் எழுதிவிட்டு தூங்கப் போய்விடுகிறார். மாநில அரசால் முடியவே முடியாது என தெரிந்திருந்தும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம் என சொன்னீர்கள். இது எவ்வளவு பெரிய மோசடி. இது பற்றியெல்லாம் கேட்டால் நாம்தான் முன்மாதிரி ஆட்சி எனச் சொல்வார்கள். இது மோசடி ஆட்சி. மோசமானவர்களிலேயே முக்கியமானவர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மோசடி ஆட்சியிலேயே மிகவும் முக்கியமான ஆட்சி திமுக ஆட்சி.
கரூர் சம்பவம் முதல் ‘ஜனநாயகன்’ வரை பழி மீது பழி போட்டார்கள். ஆனால் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தொடர்பாக பலர் குரல் கொடுத்தனர். குறிப்பாக பூசி மெழுகி பட்டும் படாமல் குரல் கொடுத்த முதல்வருக்கு நன்றி. மற்ற அனைவருக்கும் நன்றி.
அடுத்த ஆட்சியும் நாங்கள் தான் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதெல்லாம் நடக்கவே நடக்காது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது. உங்கள் தந்தையாலேயே (கருணாநிதி) அது முடியவில்லை. உங்கள் தந்தைக்கு வெண்கலச் சிலை வைக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது; ‘யாருக்கு புகழ் பாட பார்க்கிறீர்கள்’ எனக் கேட்டது. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள்’ என்று பொருள். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதாவது கேட்டால் நிதிச்சுமை எனச் சொல்கிறீர்கள், சிலை வைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது. முதலில் மக்களுக்கு சாப்பாட்டுக்கு வழியை பார்த்துவிட்டு, சிலை வைப்பது குறித்து அப்புறம் யோசிக்கலாம்.
தவெக வாக்குறுதிகள்: தவெக ஆட்சிக்கு வந்தால், உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகளில், வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
2 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மத்திய, மாநில அரசு ஊழியராக இல்லாதபட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்கான முழுச்செலவையும் அரசே ஏற்கும்.
விவசாயிகளின் விருப்பத்துக்கு எதிராக, எந்தத் திட்டமாக இருந்தாலும், மத்திய அரசின் நெருக்கடியே இருந்தாலும், அந்த திட்டத்தை நாங்கள் நிராகரிப்போம். கொள்முதல் நிலையங்களில் கமிஷன் வாங்குவது முற்றிலும் ஒழிக்கப்படும். அங்கு நெல் மூட்டைகள் முறையாக பாதுகாக்கப்படும். 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருட்களும் பாக்கெட் செய்து விநியோகம் செய்யப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் மட்டுமில்லாமல், தனியார் வேலைவாய்ப்புகளுக்கான வழியையும் உத்தரவாதத்தையும் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.