துணை நடிகர் சரண்ராஜ் உயிரிழந்த வழக்கில் மறுவிசாரணையில் தாமதம் ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க டிஜிபிக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மலையனூரைச் சேர்ந்த துணை நடிகர் சரண்ராஜ் (29), சென்னை மதுரவாயலில் வசித்து வந்தார்.
இவர் கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி வடபழனி ஆற்காடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி உயிரிழந்தார்.
காரை வேகமாக ஓட்டிவந்ததாக சாலிகிராமத்தைச் சேர்ந்த துணை நடிகர் பழனியப்பன், அவருடன் பயணித்த துரைராஜ் ஆகியோர் மீது கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால், இது திட்டமிட்ட படுகொலை என்று சரண்ராஜின் தாயார் மாரியம்மாள் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, வழக்கை மறுவிசாரணை செய்ய நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரை டிஜிபி நியமித்து, 60 நாட்களுக்குள் துணை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கடந்த ஆக.28-ம் தேதி உத்தரவிட்டது.
நீதிபதி சஞ்சய்பாபா முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறுவிசாரணை நடத்த பரங்கிமலை போக்குவரத்து ஆய்வாளர் மோகன்ராஜ் கடந்த 21-ம் தேதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த தாமதத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும் டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.