போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் எச்.கே.பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையில் 1 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
7 கிராம் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன்பு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கலேகெதர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்த போது, அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து படுகாயமடைந்த நபர் உடனடியாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே திருமணம் இடம்பெற்றதாகவும், அவரின் மனைவி தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் சிறைச்சாலைத் திணைக்களமும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.