தென்னாபிரிக்காவின் முக்கிய நகரங்களான ஜோகார்னஸ்பேக் மற்றும் கேப் டவுன் ஆகியவற்றின் புறநகர்ப் பகுதிகளில் சில மணிநேர இடைவெளியில் இடம்பெற்ற இரு கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜோகார்னஸ்பேக்கிற்கு மேற்கே உள்ள வெடேலா நகரப் பகுதியில் உள்ள மதுபான விடுதியொன்றில் சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஏகே-47 ரகத் துப்பாக்கிகளுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல், முதலில் விடுதிக்கு வெளியே இருந்தவர்கள் மீதும், பின்னர் உள்ளே புகுந்தும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர்.

13 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலாளிகள் அங்கிருந்த இரு வாகனங்களுக்குத் தீவைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கேப் டவுனின் ல்வாண்ட்லே பகுதியில் உள்ள விடுதியொன்றின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

5 பேர் சம்பவ இடத்திலும், மேலும் 05 பேர் வைத்தியசாலையிலும் உயிரிழந்து மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட பொலிஸ் புலனாய்வில், ஜோகார்னஸ்பேக் தாக்குதலானது கடந்த மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பழிவாங்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இரு சம்பவங்களிலும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனினும், பொலிஸார் தீவிர சோதனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னரே டுர்பன் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட 11 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே இந்த புதிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தென்னாபிரிக்காவில் நாளாந்தம் சராசரியாக 60 கொலைகள் பதிவாவதுடன், பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோதத் தங்கச் சுரங்க மோதல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களே இத்தகைய தொடர் மனிதப் படுகொலைகளுக்கு முதன்மைப் பின்னணியாக உள்ளது என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.