தென்னாபிரிக்காவில் சுமார் 530 கிலோ மீற்றர் இடைவெளியில் அமைந்துள்ள இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இரவு பீட்டர்மரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே உள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் பகுதியில், துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்த நிலையிலிருந்த வாகனமொன்றிற்குள் 08 ஆண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்குச் சில குடும்பத்தினர் முன்வந்துள்ள போதிலும், அடையாளம் காணும் பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை எனப் பொலிஸ் பேச்சாளர் ரொபர்ட் நெட்ஷியுண்டா தெரிவித்துள்ளார்.

முதல் சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களின் பின்னர், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஜெஃப்ஸ்வில் எனும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள 04 அறைகள் கொண்ட தற்காலிக வீடொன்றிற்குள் 06 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் உட்பட 09 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

நள்ளிரவுக்குச் சற்று முன்னர் இடம்பெற்ற இப்படுகொலைகளை, உறவினர் ஒருவரைத் தேடி வீட்டிற்குள் சென்ற சிறுவன் ஒருவனே முதலில் கண்டுள்ளார்.

சுமார் 530 கி.மீ தூர இடைவெளியில் நிகழ்ந்த இவ்விரு குற்றங்களுக்கும் இடையிலான பின்னணி அல்லது நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை என தென்னாபிரிக்கா தேசியப் பொலிஸ் ஆணையர் ஃபானி மாசெமோலா தெரிவித்துள்ளார். பிரிட்டோரியா சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர், கடந்த ஆண்டு அருகிலுள்ள சவுல்ஸ்வில் பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டு 13 பேர் காயமடைந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராகத் தேடப்பட்டு வந்தவர் என கவுடெங் பொலிஸ் ஆணையர் டோமி ம்டோம்பெனி குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான தென்னாபிரிக்காவில், அண்மைக்காலமாக இவ்வாறான பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.