இலங்கை செய்திகள்
'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையினர் மேற்கொண்ட இந்தத் துல்லியமான சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்குரிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகொன்று முதலில் சோதனையிடப்பட்டது. அதன்போது கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தொடர் சோதனையில், கடத்தலுக்குத் துணைபோன மற்றுமொரு படகுடன் மேலும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட படகுகள் நேற்று வியாழக்கிழமை (12) திக்கோவிட்டை மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விரிவான ஆய்வின் போது,478 கிலோகிராமுக்கும் அதிக ‘ஐஸ்’ போதைப்பொருள், 176 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின், 03 இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் 08 தொடர்பாடல் சாதனங்கள் எனபன மீட்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முப்படைகள் மற்றும் பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்க முனையும் குற்றவியல் வலையமைப்புகளுக்கு இனி எவ்வித இடமும் அளிக்கப்படமாட்டாது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 75,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் பாராட்டிய அமைச்சர், கடத்தல் தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் 1818 மற்றும் 1997 ஆகிய அவசரத் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.