யுத்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலிருந்திருந்தால், பிரபாகரன் குறுஞ்செய்திகளை அனுப்பி மட்டுமே தனது வேலைகளைச் சாதித்திருப்பார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
தற்போதைய அரசாங்கம் ஒரு சிறைச்சாலையைக் கூடச் சீராகக் கட்டுப்படுத்த முடியாமல் நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கிறது. தற்போதைய அமைச்சர்கள் குறைந்தபட்சம் ஒரு கிராமத்தில் உள்ள மரணாதார சங்கத்தைக் கூட நடத்திப் பழகியவர்கள் அல்லர். ஒரு மாட்டுத் தொழுவத்தைக் கூடப் பராமரிக்கத் தகுதியில்லாத நபர்களே இன்று நாட்டின் ஆட்சியாளர்களாகவும் சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைச்சராகவும் பதவியில் இருக்கின்றனர். நீர்கொழும்பு சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிவதற்குள் மகர சிறைச்சாலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் எவ்வாறு காயமடைந்தார்கள் என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அது முழுமையான அமைதி என்று கூற முடியாது. அமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த பொறுப்பற்ற பதில்களிலிருந்தே அவருடைய பலவீனமும் திறமையின்மையும் தெளிவாக வெளிப்படுகிறது. ஒரு நாட்டின் அமைச்சராக இருப்பவர் ஊடகங்களுக்கு முன்னாள் வந்து இவ்வாறான பொறுப்பற்ற பதில்களை வழங்க முடியாது.
கடந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி சிறைச்சாலை அமைப்பின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இணைந்து இணையவழி வாயிலாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். அந்தச் சந்திப்பின்போதே சிறைச்சாலைகளில் இதுபோன்ற வன்முறை வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் கலவர நிலைமைகள் நிச்சயம் ஏற்படும் என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அந்த நேரத்தில் கடமை பொறுப்பிலிருந்த அதிகாரி ஒருவர், 14 நாட்களுக்குள் இது குறித்து மேலதிகாரிகளுடன் பேசித் தீர்வு காண்பதாகக் கூறினார். ஆனால், அதற்கான தீர்வைத்தான் இன்று நாம் ஊடகங்கள் வாயிலாகக் கண்டுகொண்டிருக்கிறோம்.
பிரபாகரன் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுத்த யுத்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட இத்தகைய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியிலிருந்திருந்தால், பிரபாகரன் குறுஞ்செய்திகளை அனுப்பி மட்டுமே தனது வேலைகளைச் சாதித்திருப்பார். காவடி குழுக்களுக்கு பாதாள உலகக் குழுவினர் செய்திகளை அனுப்பித் தடைகளை ஏற்படுத்துவது போல, அன்று பிரபாகரன் இதைவிடப் பெரிய அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பார். அத்துடன் கொவிட் பெருந்தொற்று பரவிய காலத்தில் இத்தகைய அனுபவமற்ற குழுவினர் ஆட்சியிலிருந்திருந்தால் நாட்டிற்கு எத்தகைய பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
தற்போது முன்பள்ளி நடத்தும் அளவிலான அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்கிறது. நாள்தோறும் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மனிதப் படுகொலைகள் தொடர்கின்றன. நேற்று இரத்மலானையில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை, சிறைச்சாலைகளைப் பராமரிக்க முடியவில்லை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நாடு பேரழிவை நோக்கிப் பள்ளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது அமைச்சரும் ஆளுமக்கட்சியினரும் பெருமையாகவும் தம்பட்டம் அடித்தும் பேசினார்கள். ஆனால், ஒரே வாரத்துக்குள் நீர்கொழும்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் இச் சம்பவம் ஏமாற்றமளித்துள்ளது என்றார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலிருந்திருந்தால், பிரபாகரன் குறுஞ்செய்திகளை அனுப்பி மட்டுமே தனது வேலைகளைச் சாதித்திருப்பார்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space