துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 31 ஆவது காலநிலை மாற்ற உச்சி மாநாடான COP31, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பில் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை எட்ட முடியாத நிலையில், இறுதி ஒப்பந்தமின்றி முடிவடைந்துள்ளது.
இரண்டு வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மேலும் இரண்டு நாட்கள் நீடித்து, கடந்த 22 ஆம் திகதி நிறைவடைந்தன. இதன் மூலம் ஐ.நா. காலநிலை மாநாடுகளின் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற மாநாடாக COP31 பதிவாகியுள்ளது.
மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களிலிருந்து படிப்படியாக விலகுவது தொடர்பான உறுதியான தீர்மானத்தை இறுதி ஒப்பந்தத்தில் உள்ளடக்குவதற்கு பல நாடுகள் வலியுறுத்தியிருந்த போதிலும், அதற்கு இணக்கப்பாடு ஏற்படவில்லை.
துருக்கியின் அன்டால்யா நகரில் இம் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு, 20 ஆம் திகதி நிறைவடையத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முக்கிய விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் இரண்டு நாட்கள் மேலதிகமாகத் தொடர்ந்தன.
மாநாட்டின் ஆரம்பம் சுமுகமாக அமைந்ததுடன், முதல் நாளிலேயே நிகழ்ச்சி நிரல் எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய காலநிலை மாநாடுகளில் எட்டப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் மாநாடாக இது அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாவது வாரத்தில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. உலக வெப்பநிலை உயர்வை 1.5 பாகை செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவதற்கான இலக்கை அடைவது மிகவும் சவாலான நிலையை எட்டியுள்ளதாகவும், உலகம் அந்த வரம்பை மீறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையில், காலநிலை மாற்றத்திற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை எதிர்காலத்தில் எவ்வாறு குறைப்பது என்பது மாநாட்டின் முக்கிய சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது.
ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் பல காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள், நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு பயன்பாட்டிலிருந்து படிப்படியாக விலகுவதற்கான தெளிவான உறுதிமொழி இறுதி ஆவணத்தில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தின.
எனினும், புதைபடிவ எரிபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் உள்ளிட்ட சில நாடுகள் இத்தகைய உறுதிமொழிகளை உள்ளடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் துருக்கி மற்றும் அவுஸ்திரேலியாவின் இணைத் தலைமையில் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவு ஆவணத்தில் புதைபடிவ எரிபொருட்களைப் படிப்படியாகக் கைவிடுவது தொடர்பான நேரடியான குறிப்புகள் இடம்பெறவில்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள், புதைபடிவ எரிபொருட்கள் குறித்து குறிப்பிடப்படாத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தன.
மேலும், பனாமா, மார்ஷல் தீவுகள், பெலிஸ், நோர்வே மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட நாடுகளும் முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இறுதி அமர்வில் குறைந்தது 32 நாடுகள் ஒப்பந்தத்தை நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் 'அன்டால்யா ஒப்பந்தம்' என அழைக்கப்பட்ட இறுதி ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ஐக்கிய நாடுகள் காலநிலை பேச்சுவார்த்தைகளில் 2009 ஆம் ஆண்டு கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பின்னர், இவ்வாறு ஒட்டுமொத்த ஒப்பந்தமின்றி மாநாடு முடிவடைந்தது இதுவே முதல் முறையாகும்.
புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது தொடர்பான தெளிவான காலக்கெடுவோ அல்லது கட்டுப்பாடோ இறுதி ஒப்பந்தத்தில் இடம்பெறாததால், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நாடுகளின் எதிர்ப்புக்கு முன்னுரிமை கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
எனினும், மாநாட்டின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கவில்லை. மின்சாரத்தின் பயன்பாட்டை 2035ஆம் ஆண்டளவில் மொத்த இறுதி எரிசக்தி நுகர்வில் 35 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை பல நாடுகள் ஆதரித்துள்ளதுடன், காலநிலை மாற்றத்திற்குத் தழுவல் மற்றும் ஏனைய தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பிலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், மாநாட்டில் ஒருமித்த முடிவை எட்ட முடியாமல் போனமை குறித்து ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை எதிர்கொள்ள நாடுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து நியாயமான முறையில் விலகுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
COP31 மாநாட்டின் முடிவுகள், உலக நாடுகள் இன்னமும் புதைபடிவ எரிபொருட்களின் எதிர்காலம் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்ட முடியாமல் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டில் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் நடைபெறவுள்ள COP32 மாநாட்டில் இந்த விவகாரங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.