நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி
Ad Space
Ad Space
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா என சந்தேகம் எழுகிறது என தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும், தென்னிந்திய பிரபல இயக்குனருமான வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் இலங்கையின் அதிபர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆயுதங்கள் எவையும் இன்றி நடை பயிற்சியில் ஈடுபடுகின்றார்.
ஒரு ஜனாதிபதி அச்சமின்றி, நிம்மதியாக தமிழர் தாயகத்தில் நடை பயிற்சியில் ஈடுபடும்போது அங்கு பயங்கரவாதம் இல்லை என்ற கருத்து மிகச் சாதாரணமாகவே வலுப்பெறுகிறது. சம காலத்தில் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்தச் சட்டத்தினால் ஜே.வி.பியை சேர்ந்த இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும், அநுரகுமார எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அவரது தேர்தல் பிரகடனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்படும் என்ற விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடக்கின்றன. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச் சட்டமானது இதுவரை நீக்கப்படவில்லை.
அதற்குப் பதிலீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வருவதற்கு அநுர அரசு முயற்சிக்கிற செய்தியறிந்து நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டமானது ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மிக மோசமான ஒரு குரூர சட்டமாக காணப்படுகின்றது. ஒரு வேளை ஏற்கனவே உள்ள சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்காக அநுர அரசு போடும் நாடகமா இது என எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மோசமான ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, புதிய சட்டத்தை விட ஏற்கனவே உள்ள சட்டமே பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதனைத்தான் அரசு விரும்புகின்றதா என்கிற பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது.
வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் தாயகத்தில் தேசிய கட்சி ஒன்றில் இருந்து அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளனர். அந்த விடயத்தையாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏன் புரிந்து கொள்ளவில்லை. உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்கின்ற நன்றி கடன் இதுதானா?
Ad Space
Ad Space