அமெரிக்காவின் சான் டியாகோவிலிருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘ஃபிளைட் 1494’ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, தனது இருக்கையிலிருந்து எழுந்து விமானத்தின் முன்பகுதிக்குச் சென்ற ஒரு பயணி, விமானத்தின் அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்றார். அவரை இருக்கைக்குத் திரும்புமாறு விமான ஊழியர்கள் விடுத்த அறிவுறுத்தல்களை தொடர்ந்து புறக்கணித்தார்.
ஆபத்தை உணர்ந்த விமானப் பணிப்பெண்களும், சக பயணிகளும் உடனடியாகச் செயல்பட்டு அந்த பயணியுடன் போராடி, அவரைத் தரையில் அழுத்திப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். விமானம் பீனிக்ஸ் ‘ஸ்கை ஹார்பர்’ சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியை விமானத்திலிருந்து இறக்கி அழைத்துச் சென்றனர்.
அதன்பிறகு விமானம் மீண்டும் சிகாகோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் பயணி உடனடியாகக் கைது செய்யப்படவில்லை என்றாலும், இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ-க்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கதவை திறக்கமுயன்ற பயணியின் பெயர் மற்றும் அடையாள விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்து வீடியோ எடுத்த சக பயணியான சீன் பென்னட், அதைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “யாரோ விமானத்தைக் கடத்த முயன்றார்கள். நாங்கள் பீனிக்ஸில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளோம். வலிமையான பல ‘ஹீரோக்கள்’ (சக பயணிகள்) அவரை மடக்கிப் பிடித்தனர். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.