தமிழ் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் இன்று சனிக்கிழமை (26) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அருகிலுள்ள இடத்தில் முதற்கட்டமாக அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.
12 நாட்களுக்கு உணவையும் நீரையும் மறுத்து, 1987 செப்டம்பர் 26 அன்று அவர் தனது உயிரை தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபத்தின் வரலாற்றை எடுத்துக் காட்டும் வகையில் வீதி நாடகம் ஒன்றினையும் ஆற்றினர்.





