நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு - புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று புதன்கிழமை (08) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்நிலையத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களின் பாவனைக்காகக் கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka) செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில சேனரத் தெரிவித்தார்.
இப்புனரமைப்புப் பணிகள் சுமார் 585 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விமானப்படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், பல நிறுவனங்களின் பங்களிப்போடு இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பஸ்கள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.
பஸ் சேவைகள் மட்டுமன்றி, புறக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களையும் பயணிகள் இங்கிருந்தே அறிந்துகொள்ள முடியும்.
சித்திரைப் புத்தாண்டுக்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் இங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. தினசரி சுமார் 1,500 பஸ் சேவைகள் இந்த நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அவற்றைப் பராமரிக்க இலங்கை போக்குவரத்து சபையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் நேரடி மேற்பார்வையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன வசதிகளுடன் கொழும்பு - புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்று திறப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space