நாக்கொலகனே பகுதியில் மின்சார யானை வேலி காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த 'காவன்திஸ்ஸ' என்ற யானையின் மரணம் வீணாகப் போகவில்லை எனவும், அந்த உயிரிழப்பு மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு என்பவற்றின் மூலம் யானைகளுக்குச் சுதந்திரமான வழித்தடம் ஒன்று மீண்டும் திறக்கப்பட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் வெற்றி கிடைத்துள்ளது என்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் திங்கட்கிழமை (09) சட்டமா அதிபருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இது குறித்துக் கருத்து தெரிவித்த சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் கலாநிதி அஜந்தா பெரேரா, "நாக்கொலகனே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத யானை வேலிகள் காரணமாகவே காவன்திஸ்ஸ யானை உயிரிழக்க நேரிட்டது. எனினும், சட்டமா அதிபர் தரப்புடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் ஊடாக, நாக்கொலகனே பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான யானை வழித்தடங்களில் அமையப்பெற்ற சகல யானை வேலிகளையும் அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோழிப் பண்ணைகள் மற்றும் தோட்டங்களை அமைத்து இந்த இயற்கை அழிவை ஏற்படுத்தியவர்களினால் நிறுவப்பட்ட வேலிகள் இதன்மூலம் இரத்துச் செய்யப்படுவதுடன், அவ்வேலிகளை அகற்றுவதற்கான செலவுகளும் உரியவர்களிடமிருந்தே அறவிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், காவன்திஸ்ஸ யானை தனது உயிரைத் தியாகம் செய்ததன் மூலமே, அந்தப் பாதையைக் கடக்கும் சுமார் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் சுதந்திரமாக வாழக்கூடிய நாக்கொலகனே சரணாலயப் பிரதேசம் சட்டரீதியாக உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் இது உத்தியோகபூர்வமாக அகற்றப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேவேளை, தவறிழைத்த நபர்கள் இன்னும் சட்டத்தின் முன் உரிய முறையில் நிறுத்தப்படவில்லை. உயிரிழந்த காவன்திஸ்ஸ யானையின் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாமை பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்நாட்டில் ஏதேனும் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கை தாமதமாகும் பட்சத்தில், அதில் பல போலியான அல்லது தேவையற்ற விடயங்கள் சேர்க்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தவறிழைத்த குற்றவாளிகளைச் சரியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவது வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

அத்துடன் அமைச்சு ஊடாக வழங்கப்பட்ட 13,000 இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகளில் சுமார் 8,000 துப்பாக்கிகளுக்கு எவ்வித உரிமமும் இல்லை. வெறும் 5,000 இற்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் உள்ளது. எனவே, இந்த சட்டவிரோத துப்பாக்கிகள் உடனடியாக அரசாங்கத்தால் மீளப்பெறப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, அநுராதபுர புண்ணிய பூமிப் பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அகழ்வாராய்ச்சிகள் காரணமாக அங்கிருந்து வெளியேற்றப்படும் சுமார் 33 குடும்பங்களை, லோகஸ்வெவ என்ற பகுதிக்கு மீள்குடியேற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. எனினும், குறித்த லோகஸ்வெவ பகுதியும் ஒரு வனப் பாதுகாப்பு வலயமும் யானைகளின் பிரதான வழித்தடமும் ஆகும்.

 புண்ணிய பூமியிலிருந்து மக்களை அகற்றி, யானைகளின் வழித்தடமான வனப்பகுதிக்குள் கொண்டுசென்று குடியமர்த்துவது மக்களை யானைகளுடன் மோதி உயிரிழக்கச் செய்யும் செயலாகும். நாட்டின் அரசாங்கமோ அல்லது அமைச்சர்களோ யாராக இருந்தாலும் சரி, சுற்றாடலுக்கும் வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இத்தகைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

நாட்டில் வனஜீவராசிகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தவறும் ஒரு திணைக்களமோ அல்லது அமைச்சோ இயங்குவதில் எவ்வித பயனும் இல்லை. கொழும்பில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது வாய்க்கால்களைச் சரியாகச் சுத்தம் செய்து நீரை வெளியேற்றத் தவறியமை போன்ற நிர்வாகச் சீர்கேடுகளும், கழிவு மீள்சுழற்சி மற்றும் உக்கலாக்கல் போன்ற விடயங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியமையும் நகர்ப்புற முகாமைத்துவத்தின் பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.