நாட்டில் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் விசேட கூட்டு சோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிராந்திய மட்டத்திலான அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி இந்த விசேட அதிரடி நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை (06) விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி,
நடத்தப்பட்ட சோதனையில் 27,112 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் 483 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அதில், 23 பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 314 பேர் திறந்த பிடியாணையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 231 பேர் ஏனைய பிடியாணையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 301 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அபாயகரமாக வாகனம் செலுத்திய குற்றத்திற்காக 135 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வாகனக் குற்றங்களால் 4,390 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறிவதற்காக அனைத்துப் பகுதிகளிலும் இந்த விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.