'பலா பபா அபிட எபா' என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜே.வி.பி மாகாணசபை முறைமைக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. மாகாணசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு நாட்டுக்கும் தீ வைத்த ஜே.வி.பி. இன்று 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாரிய போராட்டத்துக்கு மத்தியில் தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. காலவோட்டத்தில் பல விடயங்கள் மறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஜென் சி தலைமுறையினருக்கு மாகாணசபை முறைமை பற்றி தெரியாது.
மாகாணசபை முறைமை உரிமைக்காக போராடிய பலர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் சிலர் இன்றும் உயிருடன் உள்ளார்கள். ஆகவே மாகாணசபை முறைமை என்பது இலங்கை வரலாற்றில் பாரியதொரு திருப்புமுனையாகும்.அதிகார பகிர்வுக்கான ஆரம்பக்கால நடவடிக்கைகள் முழு நாட்டுக்கும் தீ வைத்தது.
ஆரம்பகால அதிகார பகிர்வுக்கு வடக்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.தெற்கின் பயங்கரவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். வடக்கின் பிரதிநிதிகள் சமஸ்டிக்கு அப்பாற்பட்ட வகையில் அதிகாரபகிர்வை கோரினார்கள்.
இன கலவரத்தை தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனைத் தொடர்ந்தே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகார பகிர்வு அப்போதைய காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பு அதிகார பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது ஜே.வி.பி. முழு நாட்டுக்கும் தீ வைத்தது.
'பலா பபா அபிட எபா' என்று குறிப்பிட்டுக் கொண்டு ஜே.வி.பி மாகாணசபை முறைமைக்கு எதிராக கடும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஒரு மாகாணத்தில் இருந்து பிறிதொரு மாகாணத்துக்குச் செல்ல வேண்டுமாயின் விசா எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்கள்.
மாகாணசபை முறைமைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி ஜே.வி.பி.யினர் 6682 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டார்கள். 1000 இற்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களும், 485 அரச உத்தியோகத்தர்களும், 357 பொலிஸாரும், 15 இராணுவ அதிகாரிகளும், 202 இராணுவ வீரர்களும், 187 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களும், 52 அதிபர்களும், 42 பிக்குகளும் உட்பட சிவில் மக்களும், ஊடகவியலாளர்களும், கலைஞர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவி;ல்லை. ஜே.வி.பி தான் 1989 ஆம் ஆண்டு தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தியது. தீ வைத்த அரச பேருந்துகளின் பெறுமதி 288 மில்லியன் ரூபாவாகவும், தனியார் பேரூந்துகளினதும்,புகையிரதங்களினதும் நட்டம் பல மில்லியன் ரூபாவாகும்.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சிவசங்க மேனன் எழுதிய நூலில் இலங்கையில் வடக்கு மற்றும் தெற்கில் இடம்பெற்ற மோதல்களினால் நாடு என்ற ரீதியில் இலங்கை 200 பில்லியன் டொலர்களை இழந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
முழு நாட்டுக்கும் தீ வைத்த ஜே.வி.பி. இன்று 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை ஆராய்ந்து யார் நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது என்பதை இளம் தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கட்சியை தான் மாற்றினோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் தமது கொள்கையையே மாற்றியுள்ளார்கள்.
மாகாணசபைத் தேர்தல் தேர்தல் முறைக்கு எதிராக செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் பிற்போடுகிறது என்றார்.
நாட்டுக்கு சாபமாக செயற்பட்டது யார் என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும் – ராஜித
Ad Space
Ad Space
Ad Space
Ad Space