தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா மற்றும் அவரது கணவர் உட்பட ஆறு பேரை போலீஸார் இன்று (அக்.20) கைது செய்துள்ளனர். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக தலைவர்): ‘நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் கார்த்திகா திமுகவையும், அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.
ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக தவெக அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.
நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது.
மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் தவெகவில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.
குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக., இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்’
உதயநிதி ஸ்டாலின் (சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்): ‘தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த சர்க்கஸ் அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும், த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும், ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம். இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பாஜகவின் கார்பன் காப்பியாக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்’
அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): ‘தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’