திருகோணமலை மாவட்டம், வெருகல் பகுதியில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாதன் ஓடை ஆற்றினை சீரமைக்கும் பணிகள் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, அப்பகுதியில் மணல் அகழ்வுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் நிரந்தரத் தீர்வாக உறுதியான தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் இன்று புதன்கிழமை (04) ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

அத்தம தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், வெருகல் பகுதியில் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது சேதமடைந்த நாதன் ஓடை ஆற்றினை மண் இட்டு நிரப்பும் பணி கடந்த சனிக்கிழமை (31) முன்னெடுக்கப்பட்டது.

கடற்படையினர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட இச்செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்க நல்லதொரு முயற்சியாகும்.

கடந்த காலங்களில் நாதன் ஓடை ஆற்றில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக அல்லது அளவுக்கு அதிகமாக மணல் அகழ்வு செய்யப்பட்‌டு வந்தது.

இதன் காரணமாகவே இப்பிரதேசம் ஆண்டுதோறும் வெள்ள அனர்த்தத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்து நிர்க்கதிக்குள்ளாகும் அவல நிலை தொடர்கிறது.

எனவே, இப்பகுதியில் மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரங்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இயற்கையின் சமநிலைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தற்போது ஆற்றினை மண் இட்டு நிரப்பும் நடவடிக்கை ஒரு தற்காலிகச் சீரமைப்பே அன்றி, இது நிரந்தரத் தீர்வாகாது. எனவே, அப்பகுதி மக்களை வெள்ளப் பெருக்கில் இருந்து பாதுகாக்கும் வகையில் உறுதியான தடுப்பணை ஒன்றை அமைப்பதற்கான செயற்றிட்டத்தை வெருகல் பிரதேச செயலாளர் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.