சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் அக்டோபர் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (06) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதிவான் இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேகநபர்கள் இருவரும் தாக்கல் செய்துள்ள பிணை கோரிக்கை மனுக்கள் மீதான இறுதித் தீர்மானம் மற்றும் உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தலைமை நீதிவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் சதுக்கத் திட்டத்தின் கீழ் அனுமதிப் பத்திரங்களை விரைவுபடுத்திக் கொடுப்பதற்கு கைமாறாக 70 மில்லியன் ரூபாயை லஞ்சமாகப் பெற்றக் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.