கட்டான பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில் நாய் ஒன்று கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த நிலையத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கட்டான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து கடந்த 27ஆம் திகதி இரு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பணியாளர் ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள தனது வீட்டுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து, பொலிஸார் செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரு சந்தேகநபர்களும் சட்டத்தரணி ஊடாக கட்டான பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 28ஆம் திகதி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்துள்ளது.