அரசாங்கம் விதிக்கத் திட்டமிட்டுள்ள நாய்வரிக்கு எதிராக, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வீரபுரன்னப்பு நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசர்நாய்க்கடி நோயை ஒழிப்பதையும் நாய்களைப் பதிவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய் மீது வரி விதிப்பதற்கான அரசாங்க அறிக்கையை கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி வெளியிட அரசினால் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து, மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று காலை 8 மணியளவில் இப்போராட்டத்தை நடத்தினர்.
உள்ளூராட்சி மன்றங்கள் வாயிலாக நாய் வரியை விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தத் திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும், மாத்தளை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1848ஆம் ஆண்டில், அக்கால ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் விதித்த 'நாய் வரி'க்கு எதிராக வீரபுரன்னப்பு உள்ளிட்டோர் போராடினர்.
இன்றைய தினம் போராட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீரபுரன்னப்பு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய பின்னரே ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.
ஏற்கனவே கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்கள் மீது இத்தகைய வரிகளை விதிப்பது அவர்களுக்கு மேலும் துயரத்தையே ஏற்படுத்தும் என்பதால், இந்தச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை வலியுறுத்தும் நோக்கிலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக இதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.