நாவலப்பிட்டி, சமனலகம, பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசாரம் ஒன்றினை முற்றுகையிட்டு 12 இளைஞர்களை நேற்று (10) சனிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து இளைஞர்களை அழைத்து, நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து வாடகைக்கு விடப்படும் மேற்படி இடத்தில் திடீர் முற்றுகை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இடத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த இரண்டு அறைகளில் இருந்த 12 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் கட்டுநாயக்க, தியசென்புர, நீர்கொழும்பு மற்றும் மெதிரிகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து 490 மில்லிகிராம் ஹஷிஷ், 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 320 மில்லிகிராம் கொக்கெய்ன், ஹஷிஷ் சுருட்டுகள் மற்றும் இறக்குமதி வரி செலுத்தப்படாமல் நாட்டுக்குக் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள் என்பவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.