கம்பஹா நீதவான் பந்துல குணரத்னவிற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவரை நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த நாட்களில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பந்துல குணரத்னவினால் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நிரபராதியான மக்களுக்கு எதிராகக் காரணமின்றி வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்குப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பொருட்படுத்தாமல் செயற்பட்டதன் மூலம் பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என தீர்மானித்தே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கம்பஹா பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் போதைப்பொருள் வைத்துள்ளார் எனப் போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, ஒரே நாளில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்போது, ஒரே சந்தேக நபருக்கு எதிராக ஒரே குற்றச்சாட்டின் கீழ் ஒரே நாளில் இரண்டு வழக்குகள் ஏன் தாக்கல் செய்யப்பட்டன என நீதவான் வினவியபோது, அது தவறுதலாக நடந்தது எனவும் ஒரு வழக்கை திரும்பி பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, நிரபராதியான மக்களுக்கு எதிராகக் காரணமின்றி வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டாம் எனப் பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்த நீதவான், சந்தேக நபருக்கு நட்டஈடு வழங்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், சட்டவிரோதமாக வழக்குகளைத் தாக்கல் செய்யவேண்டாம் என விழிப்புணர்வு ஊட்டி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடவும் நீதவான் நடவடிக்கை எடுத்திருந்தார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நீதிச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்வைத்தார்.
இதற்கமைய, குறித்த முறைப்பாடு தொடர்பில் பந்துல குணரத்னவிடம் நீதிச் சேவை ஆணைக்குழு அவதானிப்புகளைக் கோரியிருந்தது.
அதன் பின்னர், நீதவான் பந்துல குணரத்ன சமர்ப்பித்த அவதானிப்புகளுக்கு அமைய, நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பிரசன்ன அல்விஸினால் இந்த இடமாற்றக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.