ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய இலஞ்சம், ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை (19) கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றமை மற்றும் பணமோசடி செய்தமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுகளின் கீழ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நாமல் ராஜபக்ஷ மற்றும் மேலும் மூவருக்கு எதிராகக் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் நேற்று (18) புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆவணங்கள் அனைத்தும் நிரந்தர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் பெயரிடப்பட்டுள்ள முதலாவது சந்தேகநபரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பிரியங்கா நியோமாலி மற்றும் சமிந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.