நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நீதி அமைச்சர், தற்காலிகமாகவேனும் பதவி விலகி ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசேட விசாரணை குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) நடைபெற்ற கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் இறுதிக் கிரியை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நீதி அமைச்சர் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது, ''எங்களுக்கு உத்தரவிட்டிருந்தால் இதனை நகத்தால் கிள்ளி எடுத்திருப்போம்'' என்று அங்கிருந்தவர்கள் அமைச்சரிடம் கூறியதை அவதானிக்க முடிந்தது. அதாவது நகத்தால் கிள்ளியெடுத்திருக்க வேண்டியதையே இறுதியில் கோடாரியால் வெட்டும் நிலைமை ஏற்பட்டுளள்ளது. யார் இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்கத் தவறினர். அதனாலேயே இவ்வாறான சம்பவம் நடந்துள்ளது.
உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறைச்சாலையில் காணப்படும் நெருக்கடிகளுக்காக தீர்வுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனாலேயே இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே அந்த அதிகாரியும் நகத்தால் கிள்ளியிருக்க வேண்டிய விடயம் என்று கூறியுள்ளார். அதாவது தடுத்துக்கொள்ள முடியுமாக இருந்தவிடயத்தை ஏன் தடுத்துக்கொள்ள முடியாமல் போனது?
ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அன்றைய தினத்தில் மாலை வெளிநாட்டு கைதிகள் 12 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்படியென்றால் அன்றைய தினத்திலேயே வன்முறைகளுடன் தொடர்புடையவர்களையும் மாற்றியிருக்க வேண்டும். ஏன் அதனை செய்யவில்லை.
இந்நிலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை நீதி அமைச்சர் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். அது மாத்தரம்போது. அதேபோன்று பொறுப்புக் கூறலும் அவசியமாகும். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் முன்னால் சென்று அமைச்சர் சிறைச்சாலை நெருக்கடிக்கான தீர்வு மற்றும் அதனை தடுப்பதற்காக முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பதிலளிக்க வேண்டும்.
அதில் பதிலளிப்பதென்றால் அமைச்சுப் பதவியில் இருந்துகொண்டு அதனை செய்ய முடியாது. அந்தப் பதவியில் இருந்து விலக வேண்டும். அப்போதே அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் கூறி அதனை உறுதிப்படுத்தி குற்றமற்றவர் என்பதனை உறுதிப்படுத்த முடியும். அதனால் அவர் சம்பவத்துக்கான பொறுப்பை மாத்திரம் ஏற்றுக்கொள்வதுடன் இன்றுவிட முடியாது பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொண்டு. தற்காலிகமாக அவர் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டும்.
புதிய அரசியல் கலாசாரம் தொடர்பிலேயே நீங்கள் கதைக்கின்றீர்கள். எதிர்க்கட்சியில் இருந்த போது எவ்வாறு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதன்படி செயற்பட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் பல்வேறு விடயங்களில் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார்கள். விசாரணைகள் முடிவடைந்த பின்னரே மீண்டும் அமமைச்சுப்பதவிகளை ஏற்றுக்கொண்டனர். அதேபோன்று நீதி அமைச்சரும் பதவி விலகி, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
நீதி அமைச்சர் பதவி விலகி ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள விசேட விசாரணை குழுவுக்கு ஒத்துழைக்க வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space