நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் முகாமைத்துவ தகவல் அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நீதி அமைச்சரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
நீதித்துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் முகாமைத்துவ தகவல் அமைப்பு மற்றும் நவீனமயமாக்கப்பட்ட அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கும் நிகழ்வு மைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த முகாமைத்து தகவல் அமைப்பானது சத்தியப்பிரமாண ஆணையாளர்கள், மரண விசாரணை அதிகாரிகள், சமாதான நீதவான்கள்,அதிகாரபூர்வமற்ற நீதிவான்கள், சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான நியமன செயல்முறைகளை முறைப்படுத்தவும், தொழில்முறை மட்டத்திற்கு கொண்டு செல்லவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கட்டமைப்பு ரீதியான நடைமுறைகள் மற்றும் மேம்பட்ட தெரிவு அளவுகோல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்த அமைப்பானது நியமனங்களில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதுடன், நிர்வாகத் தாமதங்கள் மற்றும் முறைகேடுகளையும் குறைக்கும்.
நவீனமயமாக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் 'பிரஜைகள் சேவை தகவல் தளம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட உதவி, சமரசம் மற்றும் மத்தியஸ்தம், கடன் இணக்கப்பாட்டு சேவைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாக்கும் சேவைகள் தொடர்பான தெளிவான மற்றும் இலகுவான தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த தளத்தின் ஊடாக பொதுமக்கள் தமக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மேம்படுத்தப்படுவதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதும் எளிதாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் யுனிசெப் இலங்கை நிறுவனம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் 'நீதிக்கான ஆதரவுத் திட்டத்தின்' கீழ் நீதி அமைச்சின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் எடோர்டோ ஸ்பாக்கா, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் மரினா டென், அமைச்சின் மேலதிக செயலாளர் கிஷாந்தி மீகஹபொல, நீதி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
நீதி அமைச்சின் முகாமைத்துவ தகவல் அமைப்பு, புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space