நீர்கொழும்பில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயற்சிக்கப்பட்ட பெருந்தொகையான பீடி இலைகளை  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பு - செத்தப்பாடுவ களப்புப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன. 

மேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட 'இலங்கை கடற்படைக் கப்பல் களனி' நிறுவனத்தின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இத்தேடுதல் நடவடிக்கையின் போது, களப்புப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் தென்பட்ட டிங்கி படகொன்று சோதனையிடப்பட்டது.

இச்சோதனையின் போது, குறித்த படகிலிருந்து ஒரு பொதியில் அடைக்கப்பட்டிருந்த 37 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து, கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிங்கி படகையும், பீடி இலைத் தொகுதியையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.