நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் ஏற்பட்டுள்ள துயர நிலைமைகள் குறித்து முறையான, நம்பகமான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய மோதல்கள் இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த குற்றவியல் நீதி நிர்வாகத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கட்டமைப்பு குறைபாடுகளின் அறிகுறியாகும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, பிரதித் தலைவர் ரீன்சி ஹர்சகுலரத்ன, செயலாளர் நளின் டி சில்வா, பொருளாளர் பசிந்து சில்வா மற்றும் உதவிச் செயலாளர் லகித வகிஷ்ட ஆரச்சி ஆகியோர் நேற்று (8) கூட்டாக விடுத்துள்ள கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜூலை மாதம் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் சம்பவங்கள் காரணமாக 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
வன்முறைகள் எங்கு எழும்பினாலும் அதனை சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. இத்தகைய மோதல் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதுடன், நீதி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. தற்போதைய நிலையில் நாட்டின் மேலும் சில சிறைச்சாலைகளிலும் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
இந்த சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் தலைமையில் சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை சட்டத்தரணிகள் சங்கம் வரவேற்கிறது. எனினும், இந்த விசாரணை மிகவும் சுயாதீனமாகவும், நடுநிலையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட்டால் மட்டுமே பொதுமக்களின் நம்பிக்கையை பெற முடியும்.
இச்சம்பவத்தில் குற்றவியல் நடத்தைகள் அல்லது உத்தியோகபூர்வ தவறுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும். அதேபோன்று, காயமடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவும் நிதியுதவிகளும் வழங்கப்பட வேண்டும்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகள் என்றே கருதப்படுவர்.
எனவே தடுப்புக்காவலில் உள்ள அனைவரும் அரசியலமைப்புக்கு இணங்க நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதேவேளை, கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பணியாற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்பான பணிச்சூழலும் போதிய வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் என்பது சிறைச்சாலைகளில் காணப்படும் கடுமையான நெரிசலான சூழலை கையாள்வதற்கான அவசர தேவையை நினைவூட்டுகிறது. வெறும் கொள்ளளவை அதிகரிப்பதுடன் மட்டும் நிறுத்தாமல், பிணை வழங்குதல், புனர்வாழ்வு திட்டங்கள் மற்றும் நவீன சிறைச்சாலை நிர்வாக முறைகள் போன்ற விரிவான சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன.
எனவே, இந்த துயர சம்பவத்தை ஒரு திருப்புமுனையாக எடுத்துக்கொண்டு, இலங்கையின் சிறைச்சாலை மற்றும் குற்றவியல் நீதி அமைப்புகளில் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் ; வெளிப்படையான விசாரணையை உறுதி செய்யுங்கள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space