நேபாள எல்லைப் பகுதியில் 4-வது நாளாக ஊரடங்கு: பிரதமர் பாலேந்திர ஷா அவசர ஆலோசனை
Ad Space
Ad Space
நேபாளத்தின் கோஷி மாகாணம், சுன்சரி மாவட்டம் இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இரு மதத்தினரின் பண்டிகை கொண்டாட்டங்களின் போது திடீரென தகராறு ஏற்பட்டது.
இது வன்முறையாக மாறியது.நிலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படையினர் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று 4-வது நாளாக இந்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்தது. நிலவரத்தைக் கட்டுப்படுத்த, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை உள்ளிட்ட 10 பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பதற்றமான இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை படிப்படியாகச் சீரடைந்து வருவதாக சுன்சரி உதவி மாவட்ட தலைமை அதிகாரி போஷன் லமிச்சானே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் சுன்சரி மாவட்ட நிலவரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் பாலேந்திர ஷா நேற்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார். மறு உத்தரவு வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Ad Space
Ad Space