மலையக ரயில் மார்க்கத்தில் பண்டாரவளை மற்றும் ஹீல்ஓய ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட 162/54 மைல் கல்லுக்கு அருகில் இன்று புதன்கிழமை (04) பாரிய மண்மேடொன்றும் பாறைகளும் சரிந்து விழுந்தமையினால் ரயில் போக்குவரத்துக்குப் பெரும் தடை ஏற்பட்டுள்ளது.

ரயில் மார்க்கத்தில் விழுந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றிப் பாதையைச் சீர்செய்வதற்குச் சுமார் 6 மணித்தியாலங்கள் வரை செல்லக்கூடும் என நானுஓயா ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பிலிருந்து நானுஓயா ஊடாகப் பதுளை நோக்கிப் பயணித்த 'பொடி மெனிகே' ரயில் இன்றை தினம் பண்டாரவளை ரயில் நிலையம் வரை மட்டுமே தனது பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், ரயில்  பாதை முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை பதுளையிலிருந்து நானுஓயா வரை பயணிக்கும் அனைத்துப் ரயில் சேவைகளும் இன்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.