அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பத்திரிகைச் செயலாளராகப் பதவியேற்ற ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்திலேயே கேட்டி ஜக்காரியா அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார்.
இந்தச் சம்பவம் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்புப் பிரிவில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த, தமது அடையாளத்தை வெளியிட விரும்பாத நபர்கள் வழங்கிய தகவலின்படி, ஜக்காரியா வெள்ளிக்கிழமை முதல் அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
அவர் படிப்படியாகப் பதவியிலிருந்து விலகி வருவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், வெள்ளை மாளிகையிலோ அல்லது டிரம்பின் நிர்வாக வட்டாரத்திலோ வேறொரு பதவியை அவர் ஏற்கவுள்ளாரா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவித்த டிரம்ப், தனது பதவியை மறுபரிசீலனை செய்யுமாறு ஜக்காரியாவை ஊக்குவித்ததாகக் கூறினார்.
எனினும், அவரைப் பணிநீக்கம் செய்வாரா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
இந்த முடிவு தொடர்பான செய்திகள் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஆகிய ஊடகங்களிலும் முன்னதாக வெளியாகியிருந்தன.
ஜக்காரியாவின் பதவிக்காலம் ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளுடன் காணப்பட்டது. அவர் முன்கூட்டியே தயாரித்த உரையை மெதுவாகவும் தடுமாற்றத்துடனும் வாசித்ததுடன், மூன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்தார். இதனால், அவரது முதல் மற்றும் ஒரே பத்திரிகையாளர் சந்திப்பு பரவலான விமர்சனங்களுக்கு உள்ளானது.
மேலும், வழக்கறிஞர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையிலும் தன்னை வழக்கறிஞராகத் தவறாக அடையாளப்படுத்திக் கொண்டாரா என்ற கேள்விகளையும் அவர் எதிர்கொண்டார். அவரை நியமிப்பதாக அறிவித்த சமூக ஊடகப் பதிவில் டிரம்ப் அவரை “ஒரு வழக்கறிஞர்” என்று குறிப்பிட்டிருந்தமையும் இந்த விவகாரத்தில் கவனத்தை ஈர்த்தது.
டிரம்பின் வெள்ளை மாளிகையில் வழக்கத்திற்கு மாறான பணியாளர் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், ஜக்காரியாவின் மிகக் குறுகிய கால எழுச்சியும் வீழ்ச்சியும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம் டிரம்பின் முதல் ஜனாதிபதி பதவிக்காலத்தில் இடம்பெற்ற பணியாளர் மாற்றங்களையும் நினைவூட்டியுள்ளது. அப்போது வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அந்தோனி ஸ்கரமூச்சி, பதவியேற்ற 11 நாட்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டார்.
“சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால், மற்றவர்களின் வேதனையில் நான் இன்பம் காண்பதில்லை” என்று ஸ்கரமூச்சி வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக ஜக்காரியா மேற்கொண்ட முயற்சிகளும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பொதுவாக டிரம்ப் நிர்வாகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படும் ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு அளித்த இரண்டு நேர்காணல்களிலும், அவரது சட்டப் பின்னணி தொடர்பாகக் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஜக்காரியாவின் பதவி விலகல், டிரம்ப் நிர்வாகத்தின் தகவல் தொடர்புப் பிரிவில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.