தமிழகத்தில் அமையவுள்ள மாதிரி பதிவு மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மட்டுமே தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும். ஆவணப் பதிவுக்கான சட்டப்பூர்வ அதிகாரம் பதிவுத்துறையிடமே இருக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஆவணப்பதிவு, திருமணப் பதிவுச் சேவைகளை எளிமைப்படுத்தி துரிதமாக வழங்க மாநிலம் முழுவதும் 25 மாதிரி பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நடப்பு (2026–27) நிதி ஆண்டில் முதல்கட்டமாக ரூ.7.84 கோடியில் சென்னை வடக்கு, மத்திய சென்னை, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோவை வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் இந்த மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இது பதிவுத்துறையின் சட்டப்பூர்வப் பொறுப்புகளை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. தற்போது சார்பதிவாளர்கள் ஆவணங்களை சட்டப்படி பரிசீலித்து பதிவு செய்வதுடன், மக்களுக்கான உதவி, அடிப்படை வசதிகள் பராமரிப்பு உள்ளிட்ட முகப்பு நிர்வாகப் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது.
இப்பணிகளை பிரித்து சார்பதிவாளர்கள் சட்டரீதியான ஆவணப் பரிசீலனையில் முழுமையாக கவனம் செலுத்தும் வகையிலேயே மாதிரி பதிவு மையங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த மையங்களின் கட்டமைப்பு, தினசரி செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள் மட்டுமே டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படும் தனியார் சேவை வழங்குநரிடம் 5 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்படும்.