பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம்
Ad Space
Ad Space
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
அதேபோன்று நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் இயலுமையை விட பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதாகவும், அதன் விளைவாக சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
அதேவேளை மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக்கொண்டுவருவதாக அரசாங்கங்கள் வாக்குறுதி அளித்த போதிலும், அது இன்னமும் தொடர்வதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் அதிருப்தி வெளியிட்ட அம்பிகா சற்குணநாதன், போதைப்பொருள் பாவனை சார்ந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தார்.
Ad Space
Ad Space